வெயில், மழை, காற்று, தூசி என்று பல்வேறுத் தாக்குதல்களிலிருந்து குழந்தையைக் காக்க, அன்னையர் பயன்படுத்தும் ஓர் அற்புதக் கேடயம், முந்தானை அல்லது, துப்பட்டா. அன்னையர் உடுத்தும் மேலாடைகள், குழந்தையின் கண்ணீரைத் துடைக்க, அல்லது, அடிபட்டக் குழந்தையின் காயத்தைக் கட்ட… என்று, பல வழிகளில் துயர் துடைக்கும்; பாதுகாப்பு வழங்கும். அன்னை மரியா, இதே பண்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உருவமே, இரக்கத்தின் கன்னி மரியா (The Virgin of Mercy). கன்னி மரியா தன் மேலாடையை, இருகரங்களாலும் விரித்தபடி நிற்க, அந்த மேலாடை தரும் பாதுகாப்பில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், குழந்தைகள், அருள் சகோதரிகள் என்று பல குழுவினர் அடைக்கலம் புகுந்திருப்பதுபோல், மரியாவின் உருவம் பல தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு முதல், இத்தாலி, இஸ்பெயின், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்களிடையே பரவியுள்ள பக்தி முயற்சியாக இது இருந்து வருகிறது. இரக்கத்தின் கன்னி மரியாவின் திருநாள், செப்டம்பர் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-09-24 19:08:21]

Menu Title