அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயத்தைச் சீரழிக்கும் துப்பாக்கி வன்முறைகள் நீங்கவும், ஒன்றுபட்ட சமுதாயம் உருவாகவும் செபிக்கவேண்டுமென்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Daniel DiNardo அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 14, இப்புதனன்று, புளோரிடா (Florida) மாநிலத்தின் Broward பகுதியில் உள்ள Marjory Stoneman Douglas உயர் நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில், 17 மாணவர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் காயமுற்றுள்ளனர். மதியற்ற இத்தகைய வன்முறைகளை வெல்வதற்கு, ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று கூறியுள்ள மயாமி பேராயர், தாமஸ் வென்ஸ்கி (Thomas Wenski) அவர்கள், Broward பகுதி மக்களுக்காக, குறிப்பாக, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்காக, அனைவரும் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். Marjory Stoneman Douglas பள்ளியின் முன்னாள் மாணவர், Nikolas Cruz என்ற 19 வயது இளையவர், பிப்ரவரி 14, பிற்பகல் 2.40 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தினார் என்றும், அவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டு பள்ளிகளில் நிகழ்ந்துள்ள வன்முறைகளில், இந்நிகழ்வு, மூன்றாவது இடம் வகிக்கும் கொடுமையான நிகழ்வு என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. (ஆதாரம் : CNA / வத்திக்கான் )வானொலி) [2018-02-15 22:26:42]

Menu Title