ஒன்பது வயதான அச்சிறுவனுக்குத் தோன்றிய ஒரு தெய்வீகக் காட்சியில், தெருக்களில் வாழும் சிறுவர்கள் பலர், சொல்லத்தகாத வார்த்தைகளால், கடவுளைச் சபித்தவண்ணம் இருந்தனர். ‘உன் பணிவாலும், அன்பாலும் இவர்களை நீ உன்பக்கம் ஈர்ப்பாய்’ என்ற குரல் அந்நேரம் ஒலித்தது. அச்சிறுவர்களைக் காப்பாற்றவேண்டுமெனில், தான் குருத்துவப் பயிற்சியில் இணையவேண்டும் என்பதை, அச்சிறுவன் உணர்ந்தார். குருத்துவப் பயிற்சியை முடித்து, அருள்பணியாளராக அவர் தன் பணியைத் துவங்கியபோது, இத்தாலிய சமுதாயத்தில் தொழில்புரட்சி, பெரும் மாற்றங்களை உருவாக்கியது. பல குடும்பங்களிலிருந்து ஆண்கள், குறிப்பாக, இளையோர், நகரங்களை நோக்கிப் படையெடுத்தனர். இத்தாலியின் தூரின் நகரில் அருள்பணியாளராகப் பணியாற்றிவந்த தொன் போஸ்கொ அவர்கள், வேலை தேடி, நகரம் நோக்கி படையெடுத்த இளையோரைத் தேடி, தொழிற்சாலைகளுக்குச் சென்றார். தங்கள் வளர் இளம் பருவத்தை, தொழிற்சாலைகளில் தொலைத்துக்கொண்டிருந்த அவ்விளையோரை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று திரட்டினார். அன்று முழுவதும், உல்லாசப்பயணம் செல்லுதல், மலையேறுதல், கால்பந்து விளையாடுதல் என்று, அவர்களுடன் முழு நாளையும் செலவழித்தார், தொன் போஸ்கோ. அவ்விளையோர், தங்கள் ஊரில் அனுபவித்த இளமைப்பருவ இனிமைகளை அந்த ஒரு நாளாவது மீண்டும் அவர்கள் அனுபவிக்க உதவினார். ஞாயிறு மாலை, அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த வாரத்தில் அவர்கள் தங்கள் வாழ்வை, இன்னும் கொஞ்சம் மேன்மைப்படுத்துவதற்கு, ஒரு சில ‘வீட்டுப்பாடங்களை’ அவர்களுக்குச் சொல்லித்தந்தார். அவ்விளையோர் தங்கள் ‘வீட்டுப்பாடங்களை’ சரிவர செய்துள்ளனரா என்பதை அறிவதற்கு, வாரத்தின் ஒரு நாள், அவர்கள் பணியாற்றிய தொழிற்சாலைகளுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்தார். இளையோர் ஏங்கிக்காத்திருக்கும் அன்பை, அரவணைப்பை, வழிநடத்துதலை அவர்களுக்குத் தந்தால், நகரங்களில் நிலவும் பல ஆபத்துக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றமுடியும் என்பதை தொன் போஸ்கோ நம்பினார்; செயல்படுத்தினார். இவரது வழிநடத்துதலால், பல்லாயிரம் இளையோர், நல்வழியில் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைத்துள்ளனர் என்பதை வரலாறு சொல்கிறது. தொன் போஸ்கொ அவர்கள் உருவாக்கிய சலேசியத் துறவு சபையைச் சார்ந்தவர்கள், இளையோர் பணிக்கென தங்களையே அர்ப்பணித்தவர்கள். இளையோரின் பாதுகாவலரான புனித தொன் போஸ்கோ அவர்களின் திருநாள், சனவரி 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. (St. John Bosco and the Youth – Alicia Ambrosio, Salt and Light TV, Canada) (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-01-30 20:36:24]

Menu Title