கத்தோலிக்க திருச்சபையில் இரு திருத்தந்தையர்களின் சமகால இருப்பு ஆறு நூற்றாண்டுகளில் நடைபெறாத ஒரு அபூர்வ நிகழ்வு
அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளைn – பல்கலைக்கழக ஊடக விரிவுரையாளர்
திருத்தந்தை 16வது பெனடிக்ற் மற்றும் திருத்தந்தை பிரான்சீஸ் ஆகிய இரு திருத்தந்தையர்களும் கத்தோலிக்க திருச்சபையில் சமகாலத்தில் இருப்பது ஆறு நூற்றாண்டுகளில் நடைபெறாத ஓரு அபூர்வ நிகழ்வாகும். தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் தாம் திருத்தந்தைப் பணியை துறக்கப் போவதாக திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் 28 பெப்ரவரி 2013 அன்று வெளியிட்ட செய்தி உலகக் கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை ஒரு மிக அதிர்ச்சியான செய்தியே ஆகும். 600 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை என்பதோடு திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிக்கும் ஒரு பதவி என்ற வழக்கமே கத்தோலிக்க திருச்சபையில் நிலவி வந்தது. 2013ஆம் ஆண்டு புதிய திருத்தந்தையாக பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலத்தில் நடைபெற்றுவரும் இச்சந்திப்பு இவ்வாண்டு 30 நிமிடங்கள் நீடித்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது 81ஆவது அகவையை அண்மையில் நிறைவு செய்தார். திருத்தந்தையின் 81ஆவது பிறந்த தினத்தில் உலகம் முழுவதில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து வத்திக்கானில் குவிந்தன. சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா (ரீ.சி.என்.எல்) செய்திச் சேவையும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் பெயரால் வாழ்த்தி மகிழ்கிறது.

உண்மையின் எண்ணங்கள்
உலகின் பிரபல்யமான மனிதர்களில் அண்மைய கணிப்பின்படி மூன்றாம் இடத்தில் இருப்பவர் திருத்தந்தை பிரான்சீஸ். 1.2 பில்லியன் கத்தோலிக்க மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது தலைவர். ஏற்கனவே திருத்தந்தை 16ஆம் பெனடிக்ற் அவர்கள் இளைப்பாறிய நிலையில் இருக்கும்போது ஆட்சி புரியும் திருத்தந்தையாக திருத்தந்தை பிரான்சீஸ் இருப்பது ஆறு நூற்றாண்டுகளில் நடைபெறாத ஓரு அபூர்வ நிகழ்வு. அண்மையில் தனது 81ஆவது அகவையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சீஸ் உலகின் கவனத்தையும் ஊடகத்தின் பார்வையையும் என்றும் தம்பக்கம் கொண்டிருப்பவர். இளைஞர் மத்தியில் மறைந்த திருத்தந்தை புனித 2ஆம் யோவான் போல் அவர்களின் பின்னர் பிரபல்யமானவர் என கணிக்;கப்பட்டவர். முதற் தடவையாக திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதற்கென சி 9 என்றழைக்கப்படும் கர்தினால்களின் குழுவை அமைத்த பெருமைக்குரியவர்.
புன்னகை பூத்த முகம் – சுறுசுறுப்பான சுபாவம் – மென்மையான அணுகுமுறை – இனிமையான பேச்சு – ஆடம்பரமற்ற செயற்பாடு – அனைவரையும் அணைக்கும் சுபாவம் – ஏழைகள் ஒதுக்கப்பட்டோர் மேல் பரிவு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற திருத்தந்தை அவர்கட்கு எங்கள் ஞானத் தந்தையர்கே இறைவனே ஆசீர் அருள்குவீரே என வாழ்த்துவோம்.
செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை
இயக்குநர் – பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி –
ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம்
ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்
ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

Menu Title