பிப்ரவரி 14, சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளம், மன்னிப்பு ஆகிய எண்ணங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். “பணிவோடும், உண்மையான மனதோடும் நமது பாவங்களை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மன்னிப்பு பெறுகிறோம், மற்றும், இறைவனோடும், நம் சகோதரர், சகோதரிகளோடும் இணைக்கப்படுகிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நடத்தும் பாவப்பரிகாரத் திருப்பவனி, பிப்ரவரி 14, இப்புதன் மாலை 4.30 மணிக்கு, உரோம், புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புறப்படும். இப்பவனியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபினா பசிலிக்காவில், மாலை 5 மணிக்கு, திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுவார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-02-14 23:49:24]

Menu Title