இளையோரின் உலகை நற்செய்தி மயமாக்க புனித ஜான் போஸ்கோ பயன்படுத்திய வழிமுறைகள் இன்றைய உலகில் மிகவும் பொருள் மிகுந்ததாக உள்ளன என்று, தூரின் மறைமாவட்ட பேராயர், சேஸரே நொசில்லியா (Cesare Nosiglia) அவர்கள் இப்புதன் வழங்கிய மறையுரையில் கூறினார். சனவரி 31, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித ஜான் போஸ்கோ திருநாளன்று, தூரின் நகர், கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பசிலிக்காவில், சிறப்புத் திருப்பலியாற்றிய பேராயர் நொசில்லியா அவர்கள், இவ்வாண்டு இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடக்கவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார். 2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூரின் நகருக்கு வருகை தந்த வேளையில், தீமைகளிலிருந்து இளையோரைக் காப்பதற்கு புனித போஸ்கோ பயன்படுத்திய வழிகள் இன்றும் பொருள் நிறைந்தவை என்று குறிப்பிட்டதை, பேராயர் நொசில்லியா அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார். இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, தூரின் உயர் மறைமாவட்ட இளையோர், ஆகஸ்ட் 9,10 ஆகிய நாள்கள் தூரின் நகரில் மேற்கொள்ளும் சந்திப்பு குறித்தும், அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11,12 ஆகிய நாள்கள் உரோம் நகருக்குச் சென்று, திருத்தந்தையுடன் மேற்கொள்ளும் சந்திப்பு குறித்தும், பேராயர் நொசில்லியா அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-01-31 23:30:03]

Menu Title