பிறரன்பினால் ஊட்டம் பெற்ற விசுவாசத்தைக் கொண்டுள்ள நம்முடைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், பிறருக்கு உதவுவதை மையம் கொண்டதாக இருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் இதயமாக, இயேசுவும், உதவித் தேவைப்படும் நம் சகோதரர், சகோதரிகளும் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, புனித எலிசபெத்தை அன்னை மரியா அவர்கள் சந்தித்த நிகழ்வை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்மஸ் காலத்தில், விசுவாசம் மற்றும் பிறரன்பின் எடுத்துக்காட்டாக, அன்னை மரியா உள்ளார் என்றுரைத்தார்.

அன்னை மரியாவுக்கும் புனித எலிசபெத்துக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின்போது, இறைவன் வழங்கிய வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பிய அன்னைமரியா பேறுபெற்றவர் என புனித எலிசபெத் வாழ்த்தியது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் வார்த்தைகள் குறித்து சந்தேகம் அடைந்த சக்கரியா அவர்கள், மற்றும், இறைவார்த்தையை முழுமையாக நம்பிய அன்னை மரியா என இருவருக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கோடிட்டுக் காட்டினார்.

துன்புறுவோரை அணுகி உரையாடுவதற்குத் தேவையான சக்தியை, விசுவாசமே நமக்கு வழங்குகிறது என்று கூறியத் திருத்தந்தை, பிறரன்பின் வழியாக விசுவாசம் ஊட்டம் பெறுகிறது என மேலும் கூறினார்.

தன் மகனின் பிறப்புக்காக தன்னை தயாரிக்கும் விதத்தில் தன் வீட்டிலேயே தங்க வேண்டிய அன்னை மரியா அவர்கள், தன் வயது முதிர்ந்த உறவினருக்கு உதவிச் செய்ய சென்ற செயல், அவர் ஏற்கனவே தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதை காண்பிப்பதாக உள்ளது என்றார்.

இயேசுவின் பிறப்பு, ஓர் எளிய பிறரன்பின் நடவடிக்கையாக துவங்கியுள்ளதை இங்கு காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையன்பின் கனியாக பிறரன்பு உள்ளது, அங்கு ‘நான்’ என்பதல்ல, மாறாக, தேவையிலிருப்போரே மையமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

அன்னை மரியா மற்றும் புனித எலிசபெத்தின் சந்திப்பு, நமக்குத் தரும் பாடமான, பிறரன்பை மனதில் கொண்டு, மற்றவர்களின் தேவைகளை இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மையமாக வைத்து செயல்படவேண்டும் என்பதே, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தான் விடுக்கும் அழைப்பு என்று தன் மூவைளை செப உரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Menu Title