NoRoom

வெறுமையாக காட்சிதரும் தீவனத் தொட்டி

இயேசுவை வரவேற்பதற்காக நம் இதயங்களைத் தயாரித்திட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். உண்மையை சொல்வதென்றால், இயேசுவை வரவேற்பதற்கான தயாரிப்பில் இருக்கின்ற இதயம் எவ்வாறு இருக்கவேண்டும் என கற்பனை செய்துபார்ப்பது கடினமே. ஆகவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இயேசுவைத் தாங்கிய அந்த எளிய தீவனத் தொட்டியை உற்றுநோக்கி, அதிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு உங்கள் வீட்டை அழகு செய்கின்ற முதன்மையான, மிக முக்கியமான அலங்கார அம்சமாக ‘கிறிஸ்துமஸ் குடில்’ இருக்கட்டும். முடியுமானால், குடிலை அமைப்பதற்காக உங்கள் இல்லத்தில் நல்லதொரு சிறப்பான இடத்தை தெரிவு செய்யுங்கள். அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே குடில் வைப்பதை தவிர்த்திடுவோம். ஏனெனில், கிறிஸ்துமஸ் மரத்தின் அடியிலே பரிசுப் பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்படுவதால், மரத்தின் கீழே அமைக்கப்பட்ட குடில் மறைந்து போக வாய்ப்புள்ளது. மாறாக, வீட்டினுள் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் சிறிய மேசை போன்றதொரு உயரமான அமைப்பின் மீது குடிலை நிர்மாணிப்பதே சாலச் சிறந்தது. திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் மாட்டுத் தொழுவத்தையும், அதைச் சுற்றி சில விலங்குகள் நிற்பதாகவும் குடிலை அமைத்திடலாம். தான் முதன்முதலாக அமைத்த கிறிஸ்துமஸ் குடிலில் உண்மையான விலங்குகள் இருப்பது அவசியம் என்று அசிசி நகர் புனித பிரான்சிஸ் எண்ணினார். இயேசு சிறுகுழந்தையாகப் பிறந்தபோது, அவரைச் சுற்றியிருந்த துர்நாற்றத்தையும், கரடுமுரடான சூழ்நிலையையும் நகரத்து மக்கள் உணர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

தயாரிப்பு ஜெபம்

அசிசி நகர் புனித பிரான்சிஸ்குவே!
குழந்தை இயேசு எவ்வாறு வறுமை கோலத்தில் எம்மிடையே தோன்றினார் என்பதை இந்த உலகத்திற்கு நினைவூட்டுவதற்காக ‘கிறிஸ்துமஸ் குடில்’ தயாரிப்பதில் பல மணி நேரங்களை செலவு செய்தீர். கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டங்களுக்காக உகந்த முறையில் தயாரிப்பதற்கு போதிய நேரத்தை ஒதுக்குவதற்கு எனக்கு உதவி செய்வீராக.
திருவருகைக் காலத்தின் உண்மையான நோக்கத்திலிருந்து என் கவனத்தை திசை திருப்புகின்ற பொறாமை, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளை என் மனதிலிருந்து அகற்றி, என் இதயத்தை தூய்மைப்படுத்திடும் வழியை எனக்கு காட்டுவீராக. இறைமகனின் வருகைக்காக காத்திருந்து தயாரிக்கின்ற இந்தாள்களில், என் நேரத்தையும், என் பணத்தையும் சீரிய வகையில் செலவு செய்வதற்கான நல்ல முடிவுகளை நான் தேர்ந்தெடுக்க என்னை வழிநடத்துவீராக.
பாலனாகப் பிறந்த இயேசு கிடத்தப்பட்ட தீவனத் தொட்டி இப்போது வெறுமையாக இருக்கின்றது. அதனைக் காணும் போது, தாழ்மையுடனும், எளிமையுடனும் வாழ்வதற்கான எண்ணங்களை இந்தத் தீவனத் தொட்டி என்னுள்ளத்தில் தூண்டுவதாக. நான் உம்மிடம் வேண்டுகின்ற இந்த கருத்துகளுக்காக கடவுளிடம் எனக்காக பரிந்துரைப்பீராக. ஆமென்.

சிறந்த தயாரிப்புக்கான சிந்தனைக் கருத்துக்கள்:-

நம் இதயங்களில் ஏற்கனவே ஒளிர்கின்ற கிறிஸ்துவின் சுடரை நினைவூட்டும் விதமாக சிறிய நேர்ச்சை விளக்கு ஒன்றை வெறுமையாகவுள்ள தீவனத் தொட்டியில் வைக்கலாம். வெறுமையாகக் காட்சியளிக்கின்ற தொழுவத்தின் முன்னே அமர்ந்து, நமது வாழ்க்கையில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நமக்கு எடுத்துக் காட்டிட வேண்டுமென்று இயேசுவிடம் மன்றாடலாம். புதியதொரு எதிர்நோக்கும், மன அமைதியும் நமக்குள்ளே பிறப்பதற்கான வழிவகைகளை அவரிடம் கேட்கலாம்.

ஒரு பேனாவும் காகிதமும் எடுத்துக்கொண்டு, வெறுமையாகக் காட்சிதரும் தீவனத் தொட்டியின் முன்னே அமர்ந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எளிதாக்கும் வழிமுறைகளையும், அதற்கான செயல்திட்டங்களையும் கடவுளிடம் கேட்கலாம்.

ஒவ்வொரு நாளும் இறைவேண்டலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் இதுநாள் வரை ஒதுக்கியதில்லை என்றால், இந்தத் திருவருகைக் காலத்தில் அதற்கு முன்னுரிமைக் கொடுப்போம். வீடு அமைதியாக இருக்கின்ற காலைப்பொழுதில் துயில் களைந்து எழுவதில் ஆரம்பிக்கலாம்; அல்லது பயணம் செய்கின்ற நேரத்தில் வானொலியை நிறுத்திவிட்டு, ஜெபம் செய்யலாம். பணிநேரம் முடிந்த பின்னர், அமைதியான ஒரு இடத்தில் நின்றுகொண்டு அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, கடவுளோடு தனியாக சிறிது நேரத்தை செலவிடலாம். ஆண்டு முழுவதற்கும் உங்களுக்கு நீங்களே தர விரும்புகின்ற அமைதி பரிசு, இத்தகைய “திருவருகைக் கால இறைவேண்டல் நேரம்” தான் என்பதை நீங்கள் கண்டுணர்வீர்கள்.

“நீங்கள் சில பணிகளை முன்னிட்டு காத்துக் கொண்டிருக்கின்ற நேரங்களில் படிப்பதற்கென்று, நற்செய்தி நூல்களில் ஒன்றை உங்களோடு வைத்திருங்கள்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். இந்த அறிவுரையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கிறிஸ்துமஸ் செயல்திட்டங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும். “விருப்பம்” “தேவை” – இவற்றிற்கிடையேயான வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு விருப்பமானவற்றை அதிகமாக கேட்பதில் ஆர்வம் காட்டும் அதே வேளையில், நாம் இயேசுவோடு நெருங்கி செல்வதற்குத் தேவையானவற்றைக் கேட்காமல் இருக்கின்றோமா? வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைப்பதற்கான ஒரு திருச்சுரூபம் அல்லது படம், நல்லதொரு ஆன்மீக நூல், எழுச்சியைத் தூண்டுகின்ற இறைஇசை அல்லது நம்பிக்கை சார்ந்த இதழுக்கு சந்தா அனுப்புதல் – இது போன்ற ஏதாவது ஒன்று நம் நினைவுக்கு வருகிறதா? இயேசுவுக்கும், அவருடைய போதனைகளுக்கும் அதிகமாக இடம் ஒதுக்குவதற்கு உகந்த வகையில் நம்மை தயாரிப்பதற்கு, நம்முடைய கிறிஸ்துமஸ் செயல்திட்டங்களின் பட்டியல் அமைந்திருக்கின்றதா என்று சோதித்தறிவதற்கு சரியான நேரம் இதுவே.

மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கவிருக்கின்ற பரிசுகளைப் பற்றியும் சிந்தியுங்கள். பரிசுகளை எந்தக் கடையில் வாங்கப் போகிறீர்கள்? கிறிஸ்தவ மதம் சார்ந்த பரிசுப் பொருள்களை விற்கின்ற கடையிலா அல்லது “மால்” என்றழக்கப்படுகின்ற உயர்தர அங்காடிகளிலா? நம்முடைய ஆண்டவருக்கு அருகிலே நெருங்கி வருவதற்கு ஏதுவான பரிசுகளை நாம் மற்றவர்களுக்குத் தர முடியுமா?

Menu Title