தாய்வான் தீவிற்கு மிகவும் தேவைப்படும் மறைப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கர்தினால் பிலோனி அவர்கள், இத்தீவின் பல ஆண்டுகால மதிப்புமிக்க சமுதாய மற்றும் கல்விப்பணிக்கு மத்தியிலும் அத்திருஅவை இன்னும் சிறியதாகவே உள்ளது என்றார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தாய்வான் திருஅவை, தனது மறைப்பணி மற்றும் அந்நாட்டின் பொதுநலனுக்கு ஆற்ற வேண்டிய தனது பங்கை உணர்வதற்கு, திருநற்கருணை மாநாடு உதவுவதாக என்று, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர், கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள் கூறினார்.

தாய்வானின் Chiay மறைமாவட்டத்தில் நடைபெற்ற நான்காவது தேசிய திருநற்கருணை மாநாட்டை, மார்ச் 01, இவ்வெள்ளியன்று திருப்பலி நிறைவேற்றி நிறைவு செய்த, கர்தினால் பிலோனி அவர்கள், கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருந்து சாட்சிய வாழ்வு வாழ்வதற்கு, திருநற்கருணை மாநாடு உதவுவதாக எனவும் மறையுரையில் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், தாய்வான் மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் அன்பு, அக்கறை மற்றும் நன்மதிப்பு பற்றி தெரிவித்தார்.

திருநற்கருணை, மாநாடு

திருநற்கருணை, மாநாடு ஆகிய சொற்கள் பற்றி மறையுரையில் விளக்கிய கர்தினால் பிலோனி அவர்கள், மாநாடு என்பது, குறிப்பிட்ட முக்கியத்துவத்தை குறிக்கும் ஒரு நிகழ்வு எனவும், திருமுழுக்கு பெற்ற அனைவரும் ஒன்றிணைந்து வருவதால், இன்றைய நிகழ்வு சிறப்பாக முக்கியத்துவம் பெற்றது எனவும் கூறினார்.

திருநற்கருணை என்பது, இயேசு தம் சீடர்களுக்கும், துவக்ககாலத் திருஅவைக்கும் விட்டுச்சென்றதைச் சுட்டிக்காட்டும் அடையாளத்தை நம் நினைவுக்கு கொணர்கின்றது எனவும், இந்த அடையாளம் வழியாக, கிறிஸ்தவர்கள், இயேசுவோடு ஒன்றிணைகிறார்கள் மற்றும் புதிய உடன்படிக்கையில் இறைக்குடும்பமாக மாறுகிறார்கள் எனவும் விளக்கினார், கர்தினால் பிலோனி.

இந்த திருநற்கருணை மாநாட்டில் கிறிஸ்து நம்மிடம் பேச வேண்டுமென விரும்புகிறோம், குறிப்பாக, நம் வாழ்வு பற்றியும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலும், அன்புகூராமலும் உள்ள தம்பதியரிடமும், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பிள்ளைகளால் கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அன்னையர் மற்றும் தந்தையரிடமும், வேலையின்றி இருப்பவர்களிடமும், கடும் வறுமை நிலையில் உள்ளவர்களிடமும், வயதானவர்கள், வாழ்வின் இறுதியில், குறிப்பாக, வாழ்வை இழந்துவிடுவோம் என்ற நோக்கத்தில் வாழ்பவர்களிடமும், கிறிஸ்து பேச வேண்டுமென விரும்புகிறோம் என்றார், கர்தினால் பிலோனி.

மறைப்பணி

மறைப்பணி, மறைப்பணியாளர் குழுவால் மட்டும் ஆற்ற இயலாது, மாறாக, இதில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், குடும்பங்கள், சிறார் என எல்லாரும் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் கர்தினால் பிலோனி.

தாய்வானில் திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், மார்ச் 6ம் தேதி வரை, மக்காவோ மற்றும் ஹாங்காக்கிலும் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார். (Fides)

Menu Title