சனவரி 6 06-01-2017

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 14-15. 19-20
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். –பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. –பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. –பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: �என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.

மாற்கு 1: 7-12

 

நற்செய்தி வாசகம்

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், �என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, �என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————-

தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது. அது தான் கடவுள் வாழும் இல்லமாகவும், இஸ்ரயேல் மக்களின் அடையாளமாகவும் காணப்படுகிறது. எருசலேம் என்று சொல்கிறபோதும், சீயோன் என்று சொல்கிறபோதும், அவை இஸ்ரயேல் மக்களைக்குறிக்கக்கூடிய வார்த்தைகளாகவே நாம் பார்க்க வேண்டும். சீயோன் என்பது மலைத்தொடர். இதன் அருகில் தான் எருசலேம் இருக்கிறது. எனவே, இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளைத்தான் குறிப்பதாக இருக்கிறது.

2குறிப்பேடு 6: 6 சொல்கிறது: ”எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்து கொண்டேன் என்று ஆண்டவர் கூறுகிறார்”. எருசலேம் என்பது கடவுளின் இல்லம். அது கடவுளால் ஆளப்படுகிற இடம். கடவுள் தன்னுடைய முழுமையான பிரசன்னத்தையும் வெளிப்படுத்துகிற இடம். அந்த இடம் எதிரிகளால் தாக்கப்படவோ, தகர்க்கப்படவோ முடியாத இடமாகக் கருதப்பட்டது. அது கடவுளால் நிர்வகிக்கப்படும் கோட்டை. எனவே, அங்கு வாழக்கூடிய மக்களால் தான், கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக அனுபவித்திருக்க முடியும். அவர்களால் தான், கடவுளின் மாபெரும் செயல்களை எடுத்துரைக்க முடியும். கடவுளைப்பற்றி அறிந்து, அனுபவித்திருக்கிற மக்களைப்பார்த்து, இந்த வேண்டுகோளானது விடுக்கப்படுகிறது.

கடவுளின் மாபெரும் செயல்களை நமது வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிற நாமும், அவரது மாட்சிமையை, மேன்மையை, பாதுகாப்பை புகழ்ந்து பாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்