ஆண்டின் பொதுக்காலம் 29 ஞாயிறு 16-10-2016

முதல் வாசகம்
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 8-13

அந்நாள்களில் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். -பல்லவி

3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்;
உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார்.
4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை;
உறங்குவதும் இல்லை. -பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
அவரே உமக்கு நிழல் ஆவார்!
6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;
இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. -பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;
அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14 – 4: 2

அன்பிற்குரியவரே, நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார். கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

லூக்கா 18:1-8

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.” பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————-

தளராத இறைநம்பிக்கை

இந்த உலகத்தில் நமக்கு பல தேவைகள் இருக்கிறது. எல்லா தேவைகளையும நாமே நிறைவேற்றிவிட முடியுமா? நம்மால் முடியாதது இருக்கிறதா? என்றால், இருக்கிறது. நமக்கென்று பல தேவைகள் இருந்தாலும், அவையனைத்தையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மை கடந்த ஒரு ஆற்றல் நமக்கு தேவைப்படுகிறது. அதுதான் கடவுள் சக்தி. அந்த கடவுளிடம் நம் தேவைகளை எடுத்துரைக்கிறபோது, அவர் நமது தேவையை நிறைவேற்றித் தருகிறவராக இருக்கிறார்.

இந்த உலகத்தில் நமது தேவையை நிறைவேற்றுகிறவர்கள் நமது தந்தையும், தாயும். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதையே, தங்களது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்கிறவர்கள் நமது பெற்றோர். அதைப்போலத்தான் கடவுள் நம் தந்தையாக, தாயாக இருந்து நமது தேவைகளை உடனிருந்து நிறைவேற்றித்தருகிறார். நமது பெற்றோர் நமக்கு தேவையானதை, நாம் கேட்பதற்கு முன்னமே நிறைவேற்றித்தருகிறார்கள். அதுபோல கடவுளும் நமது தேவைகளை அறிந்து, நமக்கு நிறைவேற்றித்தரக்கூடியவராக இருக்கிறார்.

எப்படி நம்முடைய பெற்றோர் நமக்கு தேவையான காரியங்களை நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறோமோ, அதேபோல கடவுளும் நம் தேவைகளை நிறைவேற்றுவார் என்று, நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை தளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்கான வரத்தை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்