பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை 02-11-2012 இறந்த விசுவாசிகள் நினைவு நாள்

இறந்த விசுவாசிகள் நினைவு நாள்

இன்றைய சிந்தனை

”இயேசு, ‘என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என்றார்” (யோவான் 6:38)

”வாழ்வு தரும் உணவு” பற்றி இயேசு அளித்த விளக்கம் யோவான் நற்செய்தியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடி வந்த மக்களின் பசியைப் போக்கிட இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார். அந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் தங்களுக்கு இவ்வாறு மீண்டும் உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இயேசுவை அணுகி வந்தனர். ஆனால் இயேசு மக்களின் உடல் பசியை மட்டுமல்ல, அவர்களது ஆன்ம பசியையும் போக்க வந்தார். உடலுக்குத் தேவையான உணவைப் பற்றி மட்டுமே கவலைப்படாமல் கடவுளோடு நமக்குள்ள உறவை ஆழப்படுத்துகின்ற ஆன்ம உணவு பற்றியும் மக்கள் கவலைப்பட வேண்டும் என இயேசு உணர்த்தினார். மக்களின் உள்ளத்தில் நிலவுகின்ற ஆன்ம பசியை இவ்வுலகத்தைச் சார்ந்த எந்த சக்தியாலும் நிறைவுசெய்ய இயலாது. ”விண்ணலிருந்து இறங்கி வந்த” உணவாகிய இயேசு மட்டுமே நம் ஆன்ம பசியைப் போக்க வல்லவர். அவருடைய போதனை, அவர் புரிந்த செயல்கள், அவரிடமிருந்து வருகின்ற தூய ஆவியின் வல்லமை ஆகியவை நமக்குக் கொடையாக வழங்கப்படுகின்றன. கடவுள் வழங்குகின்ற இக்கொடையை நாம் நன்றியுணர்வோடு ஏற்று, அதை நம் உள்ளத்தில் உணர்ந்து, அதற்கேற்ப வாழும்போது நம் ஆன்மா நிறைவடையும்.
விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசு நமக்கு உணவாகவும் பானமாகவும் இருக்கின்றார். அவர் ஏற்படுத்திய நற்கருணை விருந்து நம் உள்ளத்தில் இறைவாழ்வு பொழியப்படுவதற்கு வெளி அடையாளமாக உள்ளது. நமக்கு உணவாகவும் பானமாகவும் மாறிய இயேசு தம் சொந்த விருப்பப்படி நடக்கவில்லை. மாறாக, கடவுளே வகுத்த திட்டத்திற்கு ஏற்ப அவர் தம் உயிரை நமக்காகத் தம் சிலுவைச் சாவு வழியாகக் கையளித்தார். சிலுவையில் இறந்த இயேசு சாவின்மீது வெற்றிகொண்டார். புது வாழ்வு பெற்றவராக உயிர்பெற்றெழுந்தார். அவருடைய உயிரில் நாமும் பங்கேற்கின்றோம். எனவே நம்மில் நிலை வாழ்வு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த நிலைவாழ்வின் நிறைவு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாமும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக மாற வேண்டும்.