பொதுக்காலம், வாரம் 1 சனி 19-01-2013

முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-16

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும். எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால், நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!

ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் 

திபா 19: 7. 8. 9. 14

பல்லவி: ஆண்டவரே உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; 
அது புத்துயிர் அளிக்கின்றது. 
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; 
எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. 
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; 
அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; 
அது எந்நாளும் நிலைத்திருக்கும். 
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; 
அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! 
என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; 
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

மாற்கு 2:13-17

 

 

 

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

இணையதள உறவுகளே

இயேசு சுங்கச்சாவடியில் பணிசெய்த மத்தேயுவை தன்னைப் பின்தொடரவும் தன் பணியைச் செய்யவும் அழைத்தார். உடனே அவரும் எழுந்து இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசு தன் வீட்டில் அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். இந்த மத்தேயு நன்கு படித்தவர். உயர் பதவியில் இருந்தவர். கை நிறைய சம்பளம் வாங்கியவர். இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் பணியைத் தொடர்ந்தார்.

இதைப்பற்றிச் சிந்திக்கும்போது, இணையதளத்தின் இப் பகுதியை தினமும் வாசிக்கும் வாசகர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலில் அந்த சகோதரர் எழுதிய செய்தி, மத்தேயுவின் அழைப்புக்கும் பணிக்கும் மிக நெருக்கமாக இருப்பதாகத் தோன்றியது. ‘இந்த பகுதியை நான் தினமும் வாசிக்கிறேன். இப்பகுதிபற்றி என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெறியப்படுத்துவேன்’ என்று அந்த சகோதரர் எழுதியிருந்தார்.

இதுபோன்ற எண்ணம் உங்களில் உதயமாகும்போது, நீங்கள் அழைக்கப்பட்ட மத்தேயு போன்றவர்கள். பிறருக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லும்போது, நீங்கள் அப்போஸ்தலரின் பணியைச் செய்கிறீர்கள். உங்களோடு, உங்கள் வீட்டில் தங்கி விருந்துண்டு மகிழ்வதை இயேசு விரும்புகிறார். வாய்ப்பு வழங்குங்கள்.மகிழுங்கள்.

 

 

நமக்காக வந்தவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்ற இயேசுவின் அருள்மொழிகள் நமக்கு ஆறுதல் தருகின்றன. நமது பாவங்கள், குறைவாடுகள், வலுவின்மை இவற்றைக் குறித்து நாம் வெட்கப்படுகின்றோம். குற்ற உணர்வு கொள்கின்றோம். ஆனால், நமக்காகத்தான் தாம் இவ்வுலகிற்கு வந்ததாக இறைமகன்  இயேசு கூறுவது நம் இதயங்களை ஆட்கொள்கிறது. எனவே, நாம் கலங்க வேண்டாம், கவலை கொள்ளவேண்டாம். நம்மை அவரிடம் ஒப்படைத்து, அவருக்காக வாழ ஆயத்தாமானால் போதும். தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை என்னும் திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இறைவன் நமது தாழ்வுற்ற நிலையைக் கண்ணோக்குவதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்வோமா!

மன்றாடுவோம்: தெய்வீக மருத்துவரான இயேசுவே, நலமோடு இருப்பவர்களுக்காக அல்ல, நோயுற்றோருக்காகவே மனுவுரு எடுத்த உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, எங்களை அன்புசெய்து, எங்களுக்காக உம்முயிரை ஈந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குறைகளை நீர் பொறுத்துக்கொண்டு, எங்களை அன்பு செய்வதுபோல, நாங்களும் பிறரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.