ஆண்டின் பெதுக்காலம் வாரம் 2 சனி;

முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3,11-14

சகோதரர் சகோதரிகளே, திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் “தூயகம்” என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது. ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல் அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் 
திபா 47: 1-2. 5-6. 7-8 
பல்லவி: எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா. 

 மாற்கு 3:20-21

20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.

21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

 

இணையதள உறவுகளே

பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு திறைப்படம். அவன் சிறந்த ஒரு அறிவாளி. ஆனால் உலகமும் உறவும்; அவனுக்குச் சூட்டிய பட்டம், பைத்தியக்காரன். அந்த விபரீத சூழலிலிருந்து விடுபட, வேலை தேடி சென்னை செல்கிறான். அவனது அறிவுத் திறமையைப் பாராட்டிய நேர்முகத் தேர்வாளர், மும்பையில் உள்ள தலைமையிடத்துக்கு   பரிந்துரைக்கிறார். பெரிய எதிர்பார்ப்போடு,  மும்பை நேர்முகத் தேர்வாளரின் பாராட்டைப் பெற்ற அவன், உயர் நியமன ஆணையை எதிர்பார்த்தவனிடம், அன்றைய செய்தித்தாளில் இருந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி, உடனே அலுவலகத்தைவிட்டு ஆணையிடுகிறான். படத்தில் காணும் என் மகன் புத்தி சுவாதீனம் இல்லாதவன். கண்டோர் முகவரிக்கு தகவல் தெறிவிக்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

திறைப்படம் மட்டும்அல்ல. இயேசுவின் வாழ்வில் நடந்தது. உங்கள் வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கலாம். இனிமேலும் நடைபெறலாம். மனைவியும் மக்களும், பெற்றோரும் உறவும் உங்களை தவறாகக் கணிக்கலாம். சோர்ந்து போக வேண்டாம். இயேசு உங்களோடு உங்களில் ஒருவராக உள்ளார். அவர் உங்களை எப்போதும்  சரியாகக் கணிப்பார். உதவுவார். நம்புங்கள். 

 

பணிவாழ்வின் விலை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அழைக்கப்பட்டவர்கள் தமது பணிக்காகக் கொடுக்க வேண்டிய விலையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் கசப்பான பக்கங்களில் ஒன்று அவரது உறவினர்களே அவரது பணிக்குத் தடையாக இருந்தது. இயேசு மதி மயங்கிவிட்டார் என்று மக்கள் பேசிக்கொண்டதாக அறியவந்தனர் அவர்கள். எனவே, குடும்ப நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள் என்னும் செய்தி மாற்கு நற்செய்தியில் மட்டும்தான் காணக்கிடக்கிறது. பின்னாளைய நற்செய்தியாளர்கள் இச்செய்தியைப் பரப்ப விரும்பவில்லை. எனவே, அது நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், ஓர் இறைவாக்கினருக்கேயுரிய இலக்கணத்தின்படி, இறைவாக்கினருக்குத் தம் சொந்த ஊரிலும், சுற்றத்தினரிடையேயும் மதிப்பில்லை என்பதற்கேற்ப, இயேசுவும் தம் ஊரிலும், சுற்றத்திலும் அவநம்பிக்கையையும், அவமானத்தையும் சந்தித்தார். இருப்பினும், அவர் தன் பணியைக் கைவிட்டுவிடவில்லை. எதார்த்த மனநிலையுடன் போற்றுதலையும், தூற்றுதலையும் பற்றற்ற விதத்தில் சந்தித்தார். நமக்கு எடு;த்துக்காட்டாக இருக்கிறார்.

மன்றாடுவோம்: அன்பே உருவான இயேசுவே, இறைவாக்கினர்கள் சந்தித்த அனைத்துத் துன்பங்களையும் நீரும் ஏற்றுக்கொண்டீரெ. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும் நாங்கள் அவமானத்தை, அவதூறுகளைச் சந்திக்கும்போது, மனந்தளராமல், நம்பிக்கை இழக்காமல், கலங்கிவிடாமல் பணி தொடர அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்