முதல் வாசகம்
இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6
அந்நாள்களில் கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார்.
பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: “இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”.
அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 2)
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்.
1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. பல்லவி
5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி
7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 12ய
அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
பேறு பெற்ற மாந்தர்களாக வாழ்ந்திட அழைப்பு பெறுகின்றோம்.
இத்தகைய வாழ்வு சுலபமானது அல்ல.
கேட்பதற்கு சுலபமானதாக இருந்தாலும், உலகப் போக்கில் இல்லாத நிலையைத் தான் சுட்டிக் காட்டுகின்றது.
இறைவாக்கு சுட்டி காட்டுகின்ற வாழ்வு பாதை என்பது, உலகப் போக்கில் இல்லாத வாழ்வாகும். எனவே உலகத்தில் இருந்து நம்மை மீட்டு எடுத்து விட்ட தெய்வத்தின் குரல் கேட்டு நடந்தால் நாமும் பேறு பெற்றவர்களாவோம்.
மறையுரைச் சிந்தனை (ஜூன் 06)
பேறுபெற்றவர்கள்
நமது இந்தியத் திருநாட்டில் மறைப்பணி ஆற்றியவர் நார்மன் வின்சென்ட் பேர்ல் (Norman Vincent Pearl) என்பவர். அவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.
ஒருநாள் அவரைச் சந்திக்க ஒரு இந்து சகோதரர் (Brahmin) அவர் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். அவர் நார்மன் வின்சென்ட் பேர்லிடம் தனக்கு கிறிஸ்துவைப் பற்றி போதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரும் அந்த இந்து சகோதரருக்கு கிறிஸ்துவைப் பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.
எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு, அவர் அவரிடம், “இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் (இயேசுவை) பற்றி, என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டதே இல்லை; இப்படியெல்லாம் ஒரு மனிதர் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறாரா?” என்று ஆச்சரியப்பட்டார். பின்னர் அவர் நார்மன் வின்சென்ட் பேர்லிடம், “இயேசுவின் போதனையின்படி நடக்கும் ஒரு கிறிஸ்தவரைக் காட்டுங்கள், இப்போதே நான் கிறிஸ்தவனாக மாறுகிறேன்” என்றார்.
ஆனால் நார்மன் வின்சென்ட் பேர்லால் யாரையும் குறிப்பிட முடியவில்லை. அதனால் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
‘பெயர் சொல்லும் கிறிஸ்தவர்கள் என்று யாருமே இல்லை என்பதை இந்த நிகழ்வானது வேடிக்கையாகப் பதிவு செய்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘கிறிஸ்தவத்தின் மணிமகுடம்’ என்று அழைக்கப்படக்கூடிய ‘மழைப்பொழிவை’ நமக்கு வழங்குகின்றார். இங்கே மத்தேயு நற்செய்தியாளர் ஆண்டவர் இயேசுவை ‘புதிய மோசேவாக’ மக்களுக்குக் காட்டுகிறார். எப்படியென்றால் மோசே கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை சீனாய் மலையிலிருந்து பெற்றுவந்தார். அதேபோன்று இயேசுவும் மலைப்பொழிவை மலைமீது ஏறியமர்ந்து மக்களுக்கு வழங்குவதன் வழியாக அவர் புதிய மோசேவாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மலைப்பொழிவில் இயேசு கிறிஸ்து எட்டுவிதமான பேறுபெற்றவர்களைக் குறித்துப் பேசுகிறார். ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், இயேசுவின் பொருட்டு இகழ்ந்து துன்புறுத்தப்படுவோர் இவர்கள் யாவரும் பேறுபெற்றவர்களாக ஆண்டவர் இயேசு குறிப்பிடுகின்றார். நாம் இத்தகைய பேறுபெற்றவர்கள் அட்டவணையில் வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏதோ பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக வாழ்வது உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக அமைந்துவிடாது.
ஆண்டவர் இயேசு இத்தகைய பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகிறார் என்றால், அவர் தான் எதை வாழ்ந்துகாட்டினாரோ, அதையே மக்களுக்குப் போதித்தார். நம்முடைய முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக் எழுதிய ‘Jesus of Nazareth’ என்ற புத்தகத்தில் ‘மலைப்பொழிவு என்பதை இயேசுவின் தன்னிலை விளக்கம் என்று குறிப்பிடுவார். அதாவது இயேசு, மக்கள் தன்னைப் போன்று வாழவேண்டும் என்பதைதான் இந்த மலைப்பொழிவின் வழியாக குறிப்பிடுவதாகச் சொல்வார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைப் போன்று வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறோம். தொடக்கத் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த வாழ்வினைப் பார்த்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியதாக நாம் திருத்தூதர் பணிகள் நூலிலே வாசிக்கின்றோம். இன்றைக்கு நம்மை, நம்முடைய வாழ்வைப் பார்த்துவிட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஆகவே, இயேசு நமக்குப் போதித்த இந்த மலைப்பொழிவின்படி வாழ்வோம். நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் கொடைகளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.
