பொதுக்காலம், வாரம் 24 ஞாயிறு 11-09-2016

முதல் வாசகம்

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:7-11,13-14

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், “இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 10-11. 15,17 (பல்லவி: லூக் 15: 18)

பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-17

அன்பிற்குரியவரே, எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது. `பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்’. – இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. – அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

லூக்கா 15:1-32

 

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-32

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற் போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.” மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார். அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

காணாமல் போன நாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது.

இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்â€?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்.

ஆனால், இறைவனின் இயல்போ மாறானது. மோசேயின் பரிந்துரை மன்றாட்டைக் கேட்டு, பரிவு கொண்டவர். இப்போதும், தந்தை பிள்ளைகள்மேல் இரக்கம் காட்டுவதுபோல, நம்மீது இரக்கம் காட்டுபவர். நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்பவர். காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக நம்மைத் தேடி வருபவர்.

இந்த நாளில் இறைவனின் பேரன்பை உணர்ந்து, நன்றி சொல்வோமா! வணங்காக் கழுத்தினராய் வாழ்வதற்காக மன்னிப்பு கோருவோமா? நம்மைத் தேடி வரும் ஆயனின் குரல் கேட்டு மனந்திரும்புவோமா!

மன்றாடுவோம்: தேடி வரும் தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மை விட்டுப் பிரிந்து வாழும் எங்களை ஆயனாகத் தேடி வருபவரே, எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா