முதல் வாசகம்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14. 27-31
சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 100: 1-2. 3. 4. 5
பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி
4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! -பல்லவி
5 ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
லுக்கா 07:11-17
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17
அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
——————————–
இயேசுவின் பதில்
மக்களுக்கு உடல் சுகம் பெற்றுக்கொடுப்பதை ஒரு பணியாகவேச் செய்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இதற்கு முந்தைய பகுதியில், நூற்றுவர் தலைவர் ஒருவருடைய பணியாளருக்கு உடல் சுகம் கொடுக்கிறார். புறவினத்தினராக அவர் இருந்தாலும், அவர் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் பொருட்டு, அவருடைய பணியாளர் சுகம் பெறுகிறார். அதனைத் தொடர்ந்த பகுதியாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது.
இறந்த பெண்ணிற்கு தேவை வெறும ஆறுதல் மட்டுமல்ல, அவளது கேள்விகளுக்கான பதிலும் கூட. ஏனென்றால், அவள் கணவனை இழந்த, ஆதரவற்றவளாக இருக்கிறாள். கணவன் இறந்தபிறகும் அவள் கவலைகொள்ளாமல் இருந்திருக்கிறாள் என்றால், தன்னுடைய மகன் தன்னோடு இருக்கிறான் என்கிற அந்த ஆழமான நம்பிக்கை தான். ஆனாலும், இப்போது அதுவும் முடிந்துவிட்டது. இனி தன்னுடைய வாழ்வில், அர்த்தம் இருப்பதாக நினைத்திருக்க மாட்டாள். ஒருவேளை அவள் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கலாம். இனி நான் என்ன செய்யப்போகிறேன்? எப்படி எனது வாழ்வை நகர்த்தப் போகிறேன்? எனது வாழ்விற்குத் தேவையான வாழ்வாதாரங்களை நான் எப்படி பெறப்போகிறேன்? போன்ற சந்தேகங்கள் அவருக்குள்ளாக எழுந்திருக்கலாம். அத்தனை கேள்விகளோடு, தனது மகனின் இறுதிச்சடங்கில் வேதனை நிறைந்த உள்ளத்தோடு கலந்துகொண்டிருக்கிறார். இயேசு அவளது கேள்விகளுக்கு ஒரே பதிலைத்தான் கொடுக்கிறார். அதுதான் அவள் மீது காட்டிய பரிவு. அந்த பரிவு, வாழ்வின் எல்லா கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது.
வாழ்வின் பல கேள்விகளுக்கு நம்மால் அறிவுப்பூர்வமாக பதில் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் நமது பரிவு, அன்பு, இரக்கம், கருணை முதலியவை தான், அவர்களுக்கு பதிலாக அமையும். நமது வாழ்வில் இயேசுவின் இந்த மதிப்பீடுகளை மற்றவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் கொடுத்து வாழ்வோம். அதற்கான அருள் வேண்டி, இப்பலியில் பங்கெடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
—————————————————
