முதல் வாசகம்:
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7
வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 3-5. 6-7
பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4 பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. -பல்லவி
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
லூக்கா 21:34-36
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இளைஞர்களின் குடிவெறி
குடியினால் சின்னாபின்னமான குடும்பங்களின் எண்ணிக்கையை வெறும் கணக்களவில் நாம் சொல்லி மாளாது. அதனுடைய பாதிப்பு அந்த அளவுக்கு வீரியமானது. நாம் கண்கூடாக குடிக்கு அடிமையானவர்களின் நிலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், இன்றைய இளைய தலைமுறையினர், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கின்றனர். தொடர்ந்து அதே தவறையே செய்து கொண்டிருக்கின்றனர். எனவே தான், குடியை ஒரு நோய் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட கெட்ட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கு அழைப்புவிடுப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.
இன்றைய இளைய தலைமுறையினர் குடிவெறிக்கு அடிமையாவதன் காரணம் என்ன? இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய தவறாகக் கருதப்படுவது “குடிப்பதை தவறு என்று நினைக்காத மனநிலை”. குடிப்பதை ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கக்கூடியதாக நினைக்கும் சமூகம் தான் நாம் வாழக்கூடிய சமுதாயம். குடிக்காதவர்கள் ஆளுமை இல்லாதவர்கள் என்பது போல மாயத்தோற்றத்தை இந்த சமுதாயம் தங்களுடைய வியாபார உத்திக்காக உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த மாய வலைகளில் சிக்கிக்கொண்ட மான்களாக, இன்றைய இளைஞர்களின் நிலை காணப்படுகிறது. அறியாமை தான், இதுபோன்ற வாழ்வைச் சூறையாடும் தவறுகளை மீண்டும், மீண்டும் இளைஞர்களைச் செய்யத் தூண்டுவதாக இருக்கிறது.
நமது இளைய சமுதாயம் தான் இந்த நாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய சமுதாயம் என்று கட்டுரைகளிலும், சொற்பொழிவுகளிலும் புகழ்ந்து தள்ளுகிறோம். ஆனால், அவர்களை குடிபோதைக்கு ஆளாக்கி, அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றுவது நம்மை ஆளக்கூடிய அரசாங்கங்கள். அவர்களை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். தனியொரு மனிதனின் விழிப்புணர்வுதான் இத்தகைய மாய பிம்பத்தை உடைத்தெறிய முடியும்.
