முதல் வாசகம்
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20
சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன. மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 10. 11-12. 13
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது;
அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி
11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
லூக்கா 21:5-11
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்’ என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
————————-
திருவிழாக்கள்
இன்றைய நற்செய்தியில் கோவிலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிற ஒரு சிலரைப்பார்த்து இயேசு பேசுகிறார். அவர்கள் கோவிலைப் பற்றிப் பேசியது என்ன? கோவிலின் வெளிப்புற அடையாளங்களை வைத்து, அவர்களது உரையாடல் அமைந்திருக்கிறது. நிச்சயம் இயேசுவுக்கு இது வருத்தத்தைத்தான் கொடுத்திருக்கும். ஏனென்றால், ஆலயம் என்பது ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்வதற்காக கட்டப்பட்ட இடம். அப்படிப்பட்ட இடத்தை, ஆலயத்தின் பிரமாண்டம் பெறுகிறது என்றால், அது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே தான், இயேசு வெளிப்புற அடையாளங்கள் நிலைத்து நிற்கக்கூடியது அல்ல என்று சொல்கிறார்.
இன்றைக்கு நாம் கொண்டாடக்கூடிய விழாக்களும், பக்திமுயற்சிகளும் இது போன்ற வெளிப்புற அடையாளங்களை வைத்துதான் இருக்கிறது. மக்களிடம் ஆன்மீக வறட்சி காணப்படுகிறது. திருவிழாக்களை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, கடவுளை உண்மையாக வழிபட வேண்டும் என்கிற எண்ணம் நம்மிடையே இல்லை. திருவிழா என்றாலே ”ஜாலி” ”என்ஜாய்” போன்ற வார்த்தைகள் தான் மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறதே தவிர, உண்மையான ஆன்மீக எண்ணம் காணப்படுவது மிக மிக அரிது. திருவிழா என்பது முதலில் ஆண்டு முழுவதும் நம்மை வழிநடத்துகின்ற இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய விழா. அந்த விழா எடுப்பது இறைவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவரையும், அவரது புனித இடத்தையும் அவசங்கைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை வைத்து, அதற்கு வெளியே யாரும் செல்ல முடியாதவாறு, சிறைக்கைதிகளாக அருட்பணியாளர்களும் மாறிவிட்டோம்.
நாம் கொண்டாடும் விழாக்கள் உண்மையிலேயே கடவுளுக்கு விருப்பமுள்ளதாக இருக்குமா? ஓசேயா 6: 6 “எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்” என்ற இறைவார்த்தைக்கு நமது பதில் என்னவாக இருக்கும்? இன்றைக்கு இயேசு கிறிஸ்து நம் நடுவில் வந்தால், நாம் கொண்டாடக்கூடிய திருவிழாக்களை நினைத்து மகிழ்ச்சியடைவாரா? சிந்திப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
