திருவருகை காலம்; முதல் வாரம் வியாழன் 01-12-2016

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 19-21. 25-27

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்;
அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,
உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். -பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா.

மத்தேயு 7:21, 24-27

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: �என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————-

இயேசுவின் சீடர்கள்

யார் உண்மையான சீடன்? என்பதற்கு, இயேசு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். இந்த உலகத்தில் பலர் கடவுளை மீட்பராக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கின்றனர். அவர்கள் அனைவருமே இயேசுவின் சீடர்களா? நிச்சயமாக இருக்க முடியாது. கடவுளின் பெயரை வெறும் உதட்டளவில் உச்சரிக்கக்கூடிய அனைவருமே, கடவுளின் பிள்ளைகளாகக் கருதப்பட தகுதியற்றவர்கள். அப்படியென்றால், யார் தான் இயேசுவின் உண்மையான சீடர்?

இயேசுவின் மனநிலையை யாக்கோபும் தன்னுடைய திருமுகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். 2: 26 ”உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே”. ஆக, கடவுளின் சீடர்களாக மாற வேண்டுமென்றால், உதட்டளவு வார்த்தைகள் அல்ல, நமது செயல்பாடுகள் தான், முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த செயல்பாடுகள் கடவுளின் திருவுளத்தின்படி இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். நமது எண்ணங்களின்படியோ, சிந்தனைகளின்படியோ அல்ல, மாறாக, கடவுளின் திருவுளத்தின்படி அது அமைய வேண்டும். அதுதான் நாம் கடவுளின் சீடர்களாக மாறுவதற்கான, செயல்பாடுகளாக இருக்க முடியும்.

இன்றைக்கு இயேசுவின் சீடர்களாக தங்களையே மக்களிடத்தில் காட்டிக்கொள்கிற பலர், வெறும் உதட்டளவு சொற்பொழிவாளர்களாகவே இருக்கிறார்கள். அதிகமாகப் பேசுகின்றனர். மக்களின் கவலைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் மூலம் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். நல்ல சீடர்களாக வாழக்கூடிய அருள் வேண்டி, மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்