முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து `புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி
4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி
6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்;
உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!
உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” -பல்லவி
8 “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.அல்லேலூயா.
மத்தேயு 8:5-11
நற்செய்தி வாசகம்
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11
அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். �ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், �நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, �ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, �உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
————————-
கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கை
இயேசுவிடம் உதவி கேட்டு வருகிறவர்கள் பலவிதமான பதில்களைத் தருகிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு பல கேள்விகளைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலும் அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, இயேசு அவர்களுக்கு உதவி செய்கிறார். இயேசுவின் இந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறு வேறாகவே இருக்கிறது. உதாரணமாக, கானானியப்பெண் தன்னுடைய மகளுக்காகப் பரிந்து பேசக்கூடிய நிகழ்ச்சியில் இயேசு முதலில் மறுப்பதற்கான பதில்களையும், மழுப்பலான பதில்களையும் தருகிறார். இறுதியில் அவளது நம்பிக்கை வெற்றிபெறுகிறது. அவளது தேவையை இயேசு நிறைவேற்றுகிறார்.
இன்றைய நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் உதவி கேட்ட உடனே, தான் அவரோடு நேரிலேயே வருவதாக வாக்களிக்கிறார். அவரது ஒரு வார்த்தை தன்னுடைய மகனைக் குணப்படுத்தும் என்கிற அந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தில், இயேசு ஆச்சரியம் கொள்கிறார். அவனுடைய தேவையை நிறைவேற்றுகிறார். இரண்டுமே வெவ்வேறு விதமான நிகழ்வுகள், கோணங்கள். ஆனால், இரண்டிலும், கடவுளின் ஆசீரைப் பெற்றுக்கொடுத்தது அவர்களின் உண்மையான நம்பிக்கை. கடவுளிடம் நாம் செல்ல, அவரிடம் உதவி கேட்க நமக்கு தேவைப்படுவது நம்பிக்கை மட்டும்தான். அதைத்தான் இந்த நிகழ்ச்சியும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
கடவுளிடம் நாம் எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அவரிடத்தில் ஒருபோதும் நமது நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. உண்மையான நம்பிக்கை நமக்கு நிறைவான கடவுளின் ஆசீரை வழங்கும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
