முதல் வாசகம்
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11
இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 80: 1,2b. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக!
உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்;
நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
மத்தேயு 17:14-20
நற்செய்தி வாசகம்�
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13
இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
————————
கடவுள் மீது கொண்டிருக்கிற விசுவாசம்
மறைநூல் அறிஞர்களின் நம்பிக்கையின்படி, மெசியா வருவதற்கு முன்னால் எலியா தோன்றுவார். இந்த நம்பிக்கையின்படி பார்த்தால், எலியா இன்னும் வரவில்லை. எனவே, இயேசு கண்டிப்பாக மெசியாவாக இருக்க முடியாது என்று, மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், மக்கள் இயேசுவை மெசியா என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். இயேசுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தன்னை மெசியாவாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இயேசு அவர்களின் போதனைக்கு விளக்கம் கொடுக்கிறார்.
எலியாவை திருமுழுக்கு யோவானுக்கு ஒப்பிடுகிறார். ஏனெனில், அதிகாரவா்க்கம் திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டாலும், மக்கள் அனைவருமே திருமுழுக்கு யோவானை மிகப்பெரிய இறைவாக்கினராக எண்ணிக்கொண்டிருந்தனர். இயேசுவின் இந்த விளக்கத்தை நிச்சயமாக மறைநூல் அறிஞர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், மக்களுக்கு அவருடைய விளக்கம் தெளிவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் இயேசுவின் விளக்கத்தை நிச்சயம் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். இது இயேசு தான் மெசியா என்பதை, மீண்டும் மக்களுக்கு வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
இயேசுவை அதிகாரவர்க்கமும், ஆளும்வர்க்கமும் தான் மெசியாவாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். ஏனெனில், அவர்களுக்கு தங்களது பதவி போய்விடுமோ என்கிற அச்சம் இருந்தது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை அவர்கள் வைத்திருந்தால், இதுபோன்ற தேவையற்ற அச்சங்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம். கடவுள் மீது நாம் கொண்டிருக்கிற விசுவாசமாவது சிறந்த விசுவாசமா? சிந்திப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
