திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் திங்கள் 12-12-2016

முதல் வாசகம்

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17

அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: �பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.” பிலயாம் திருஉரையாகக் கூறியது: �பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5. 6,7. 8-9
பல்லவி: ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

மத்தேயு 21:23-27


நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, �எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, �நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள், � `விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், `பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். `மனிதரிடமிருந்து’ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், �எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், �எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக?

அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது.

இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை இந்த சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எத்தனை உயிர்ச்சேதம், பொட்சேதம். ஆனாலும், அதிகாரப்போதைக்காக இன்றைக்கு எத்தனையோ பேர் சண்டையிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். நாமும் அந்த கூட்டத்தோடு சேராது, கிறிஸ்துவின் பணியாளர்களாய் இருப்பதில் நிறைவுகொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்