திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன் 07-12-2016

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. “என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————-

இயேசுவின் அளவுகடந்த அன்பு

இந்த பகுதியின் முழுமையான பொருளை அறிந்து கொள்ள இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைப் பிண்ணனி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? செய்யக்கூடாததைச் செய்தால் அதனால் வரும் இடர்கள் என்ன? என்றும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆளும்வர்க்கத்தினரால் சொல்லப்பட்டிருந்தது. இது ஒரு வகையான சுமையை. அவர்களை சுந்திரமாக சுவாசிக்க செய்யாமல், ஒருவிதமான அடிமை மனநிலையில், இறுக்கமான மனநிலையில் வைத்திருப்பதற்கான ஒரு சூழ்நிலை. இப்படிப்பட்ட மக்களுக்கு இயேசு போதிக்கிறார். ஒழுங்குகளும், சட்டங்களும் தேவையில்லை என்பது இயேசுவின் வாதமல்ல. மாறாக, அந்த ஒழுங்குகளும், சட்டங்களும் ஒருவிதமான அடிமைநிலைக்கு ஒருவரைக்கொண்டு செல்லுமானால் அது தேவையில்லை என்பதுதான் இயேசுவின் வாதம்.

இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கிற மக்களுக்கு இயேசுவின் பதில்: ”பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்பது. இது, கடவுள் எந்த அளவுக்கு மக்களுக்காக தனது இதயத்தில் இடம் வைத்திருக்கிறார். அவர்கள் வாழ்க்கை எவ்வளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. நாம் ஒருவர் கூட, வாழ்க்கையில் துன்பப்பட வேண்டும் என்று, இயேசு எண்ணியது கிடையாது. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் இயேசு ஆசைப்படுகிறார். அதனுடையா வெளிப்பாடாகத்தான், இந்த வார்த்தைகளை உதிர்க்கிறார்.

நமது வாழ்க்கையில் கடவுள் நம்மோடு இருக்கிறார், நமக்காக இருக்கிறார், நமது துன்பங்களிலும், துயரங்களிலும் உடனிருக்கிறார் என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும். அந்த ஆறுதல் நிச்சயம் நமது வாழ்வை நம்பிக்கையோடு நடத்திச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்