முதல் வாசகம்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 49: 1-2, 8-10
யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப்போகிறேன். கூடிவந்து உற்றுக்கேளுங்கள்; யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள். யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர். யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான்; அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும்வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 72: 1-2. 3-4. 7-8. 17
பல்லவி: ஆண்டவருடைய சமாதானம் என்றென்றும் நிலவுவதாக.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி
3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்;
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக!
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. -பல்லவி
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி
17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக!
எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதரின் ஞானமே, ஆற்றலுடன் அனைத்தையும் அன்பாய் நடத்துகின்றவரே, எங்களுக்கு உண்மையின் வழி காட்ட வந்தருளும். அல்லேலூயா. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டிருக்கும் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு 1:1-17
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
————————-
உண்மையான உறவு
எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார்.
ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அந்த அளவுக்கு ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்தார். எனவே தான், இயேசுவை அவருடைய வழித்தோன்றலாக அறிவிப்பதன் மூலம், மக்கள் வெகு எளிதாக இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நம்பி, மூதாதையர் பட்டியலை அவர் எழுதுகிறார்.
நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் நமக்குள் எப்போதும் இந்த எண்ணம் மேலோங்கியிருக்க வேண்டும். கடவுள் தான் நம் அனைவருக்கும் தந்தை. நாம் அவரின் பிள்ளைகள். அந்த எண்ணம் நமக்குள்ளாக இருந்தால், நிச்சயம் நம்மால் எல்லோரையும் அன்பு செய்து, நல்ல உறவோடு வாழ முடியும்.
———————————-
இயேசுவே ஆண்டவர்
யூதர்களுக்கு மூதாதையர் பட்டியல் என்பது முக்கியமானது. அவர்கள் ஒருவருடைய பிண்ணனி அறிவதிலும், அதன் அடிப்படையில் அவருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பதில் கருத்தாயிருந்தனர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களைப் பொறுத்தவரையில் தூய்மை இனம் என்ற கருத்தியலில் உறுதியாக இருந்தனர். கலப்பு என்பது அவர்களது வார்த்தையில் அருவருக்கத்தக்கது. எனவே தான், சமாரியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது.
பெற்றோரோ அல்லது மூதாதையர்களோ கலப்பு மணம் புரிந்தவர்களாக இருந்தால், ஒருவர் யூதர் என அழைக்கப்படும் தகுதியையும், கடவுளின் மக்களாக கருதப்படும் தகுதியையும் இழந்துவிடுவார்கள். இறைவனுடைய பீடத்தில் பணிபுரிய விரும்பும் குரு, ஆரோனின் வழிவந்தவர் என்பதற்கான, சான்றை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர் அந்த தகுதியை இழந்துவிடுவார். இந்த மூதாதையர் பட்டியல் தலைமைச்சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. ஏரோது, யூதர்களின் குறுநில அரசராக இருந்தாலும், அவன் ஈதோம் இனத்தைச்சார்ந்தவன். எனவே, அவன் யூதர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு, தாவீதின் வழிவந்தவர் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவே, இயேசுவைப்பற்றிய இந்த மூதாதையர் பட்டியல் எழுதப்பட்டது.
இயேசு உண்மையிலே மெசியா. கடவுளின் மகன். தாவீதின் வழிவந்தவர் என்று, நற்செய்தியாளர் பல வழிகளில் வெளிப்படுத்தினர். இவ்வாறு, இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டனர். நாமும் நமது வாழ்வில், இயேசு தான் நம் அனைவருக்கும் மெசியா, என்கிற உண்மையை, நமது வாழ்வு மூலமாக அறிக்கையிட வேண்டும். அதற்கு நாம் தகுதியான முறையில் வாழ வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
