திருவருகை காலம்-நான்காம் வாரம் ஞாயிறு 18-12-2016

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: �உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, �நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: �தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4யb. 5-6
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக் கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது `கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

மத்தேயு 1:18-25

 

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, �யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார். �இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

————————-

ஏற்றுக்கொள்ளுதல்

யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. “ஏற்றுக்கொள்ளுதல்” என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம்.

யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை பொறுமையாக ஆராய்ந்து பார்ப்பதால் எடுக்கக்கூடிய முடிவு. அதனடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம். இதுதான் யோசேப்பை தனித்துவமிக்க மனிதராக அடையாளம் காட்டியது.

நமது வாழ்விலும் யோசேப்பிடம் காணப்படக்கூடிய இந்த “ஏற்றுக்கொள்ளக்கூடிய” மனது நமக்கு வேண்டும். மற்றவர்களுடைய குறைகளை தவிர்த்துவிட்டு, அவர்களது நிறைகளை அலசி ஆராய்ந்து, நல்ல முறையில் உறவை பலப்படுத்துவதற்கான ஆசீர் வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்