திருத்தந்தை பதினாராம் பெனடிக்ட் நம்பிக்கையின் ஆண்டை அறிவித்து வெளியிட்ட
‘நம்பிக்கையின் வாயில்’(porta-fidei) எனும் திருத்தூது மடல்இறைவனோடு உறவு கொள்ளவும் திருச்சபையினுள் நுழையவும் வகைசெய்யும் நம்பிக்கையின் கதவு (திப 14: 27) எப்போதும் திறந்தே உள்ளது. இறைவார்த்தை அறிவிக்கபடும் போது, அருளினால் நாம் மாற இதயம் அனுமதிக்கும் போது, நாம் இந்த கதவை தாண்டி வரமுடியும். இந்த கதவின் வழியே வருவதென்பது நமது வாழ்நாள் பயணமாகும். இது நாம் இறைவனை ‘அப்பா’ என அழைக்க உரிமை தரும். திருமுழுக்கில் (காண். உரோ 6:4) தொடங்கி நிலை வாழ்வுக்குள் நுழைவதில் முடிகிறது. இந்த நிலைவாழ்வு தம் மீது நம்பிக்கை கொள்வோரை தனது மகிமைக்குள் (காண். யோவா 17:22) தூய ஆவியை கொடையாக அருளிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் பயனாகும். நம்பிக்கையை அறிக்கையிடுதல் என்பது தந்தை மகன் தூய ஆவியாகிய அன்பே உருவான மூவொரு இறைவனை நம்புவதாகும். தந்தையாகிய இறைவன் காலம் நிறைவுற்ற போது தம் மகனை நமது மீட்புக்காக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தனது மரணம் உயிர்ப்பு எனும் மறைப்பொருள் வழியாக உலகை மீட்டார். தூய ஆவி ஆண்டவரின் மகிமையின் வருகைக்காக காத்திருக்கும் திருச்சபையை காலம் தோரும் வழிநடத்தி வருகின்றார்.
