உறவுச் சிக்கல்கள் “உலக அமைதி எங்கிருந்து தொடங்குகிறது? “

உறவுச் சிக்கல்கள்

உலக அமைதி எங்கிருந்து தொடங்குகிறது?

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும்தான். குடும்பங்களில் அமைதி நிலவினால், தெருக்களில் அமைதி உண்டாகும். அது ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், பின் மாநிலங்களுக்கிடையிலும், இறுதியில் நாடுகளுக்கிடையிலும் அமைதியை உருவாக்கும்.

எனவே, நம் குடும்பங்களில் அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஒரு வழி, நம் குழந்தைகளிடையே தோன்றும் பிணக்குகள், சண்டை சச்சரவுகளைத் தக்க முறையில் கையாண்டு, அமைதியுடன் வாழச் செய்தல். அதற்கான பயிற்சிகளை நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கவே;ணடும்.

சண்டை, சச்சரவுகள், அதன் வழியாக மனக் கசப்புகள் நிகழும்போது பின்வரும் அய்ந்து படிமுறைகளைப் பின்பற்ற ஆலோசனை தருகின்றனர் உளவியலாளர்கள்:

1. ஏற்றுக்கொள்ளுதல்: நான் தவறு செய்துவிட்டேன், தெரியாமல் பேசிவிட்டேன் என்று சொல்ல முன்வருவது மிகவும் துணிச்சலான ஒரு செயல். முதலில் மனதளவில் தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நம் குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டும். தவறு செய்வது மனித இயல்புதான், தவறு செய்தால் தாழ்வில்லை என்று பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்வதன் மூலம் இந்த மனநிலையை நம் குழந்தைகளிடத்தில் வளர்க்கலாம்.

2. மன வருத்தம் தெரிவித்தல்: அடுத்தபடியாக, தனது மன வருத்தத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதுவும் ஒரு துணிச்சல் நிறைந்த ஒரு செயல். பலரும் மனதிற்குள் வருந்தலாம். ஆனால், அதனை வெளிப்படையாக அறிவித்தல் பெருந்தன்மையின் அடையாளம். இதனைச் செய்வதற்கு பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும். அவர்களே தங்கள் செயல்களுக்காக மன வருத்தம் வெளியிட்டு மாதிரி காட்டலாம்.

3. மன்னிப்பு கேட்டல்: மன வருத்தம் வெளியிடுவதைவிட மேலான செயல் அத்தவறுக்காக மன்னிப்புக் கோரல்.

4. விளைவை எதிர்கொள்ளல்: தவறு செய்தவர்கள் அதன் விளைவுகளையும் மனம் நோகாமல் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தேர்வுக்கு முன் நன்றாகப் படிக்காத மாணவன், தேர்வில் தோல்வியை அல்லது குறைந்த மதி;ப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன் வரவேண்டும். அந்த விளைவிலிருந்து தப்பிக்க முயல்வது மாண்பல்ல.

5. அத்தவறை மீண்டும் செய்யாதிருக்க திட்டமிடல்: நல்ல மனநிலை உடையவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வர். அத்தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வர்.

அமைதி நிலவ அவசியமான ஒன்று மன்னிப்பு. மன்னித்தல் என்பதன் பொருளை தெளிவாக்கிக் கொள்வது உறவுகளைச் சீர்படுத்த உதவும்.

மன்னிப்பு என்பது

• உணர்வு அல்ல. உணர்வுபூர்வமாக பிறரை மன்னிக்க பலருக்கும் கடினமாக உள்ளது. மனக் காயங்கள் ஆறுவதற்கு பல காலம் ஆகலாம். அதுவரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மனம் புண்பட்டிருந்தாலும், நாம் மன்னிக்க முன் வரலாம். தேவையானது மன்னிக்க வேண்டும் என்ற விருப்பம்தான்.

• மன்னித்தல் என்பது மறத்தல் அல்ல. ‘மறப்போம், மன்னிப்போம்’ என்பது அனைவரும் அறிந்த சொல்லாடல். ஆனால், மறப்பது மன்னிப்பின் உள்ளடக்கம் அல்ல என்பது உளவியல் உண்மை. நினைவில் இருந்தே ஒரு நிகழ்வை அகற்றுவது நமது கையில் இல்லை. ஆனால், மன்னிப்பது என்பது நம் கையில் இருக்கிறது.

• மன்னித்தல் என்பது நிபந்தனையுடன் கூடியது அல்ல. நிபந்தனையற்ற விதத்தில் இறைவன் நம்மை மன்னிக்கின்றார். மீண்டும் தவறு செய்தாலும் மன்னிக்கின்றார். நமது மன்னிப்பும் அப்படி இருக்க வேண்டும்.
மன்னித்து, அமைதி பூண விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியவை:

1. பிறரின் கடந்த காலத் தவறுகள், மன வருத்தங்களைப் பற்றி மீண்டும் பேசாமல் இருப்பது நன்று. திருமண வாழ்வில் பொன்விழா கண்ட ஒரு கணவன் தன் மனைவியைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘ஒருமுறை அவளைத் துன்பத்தில் தவிக்கவிட்டுவிட்டு நான் ஓடிவிட்டேன். திரும்பி வந்த என்னை அவள் ஏற்றுக்கொண்டாள். ஆனால், ஒருநாள்கூட நீங்கள் என்னை விட்டுவிட்டு ஓடிப்போனவர்தானே’ என்று அவள் சுட்டிக்காட்டிப் பேசியதில்லை.

2. அந்த நிகழ்வுகளைப் பற்றிப் பிறரிடமும் பேசாமல் இருக்க வேண்டும். பிறர் அந்த நபர்மேல் கொண்டுள்ள நன்மதிப்பைக் குறைக்காத வண்ணம் செயல்படுவது மாண்பு நிறைந்த ஒரு செயல்.

3. மீண்டும் அவர்களுடன் நட்பு பாராட்டுதல் தேவையான ஒன்று.

பெரும்பாலான நேரங்களில் அமைதிக்கு ஊறு விளைவிப்பது தேவையற்ற பேச்சுதான். எனவே, நமது பேச்சில் மிகவும் கவனமாயிருத்தல் நன்று. பேசிவிட்டு சிந்திப்பதைக் குறைத்து, சிந்தித்து அதன்பின் பேசுவதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் பேசும்போது ‘இது தேவையா’, ‘பயனுள்ளதா’என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு அதன் பேசினாலே போதும். பிறர் நம்மைப் இழிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டுப் பேசினாலும்கூட, நாம் நினைத்தால் அந்த முயற்சியை நமது அமைதியால் தோற்கடிக்கலாம்.

நம் முன் மாதிரியால் அமைதியின் தூதராய் மாறுவோம்!