10ஆம் வாரம் – புதன் இரண்டாம் ஆண்டு 08-06-2016

முதல் வாசகம்

நீரே ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறிவார்களாக!

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 20-39

அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய் வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான்.

எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!”

அப்பொழுது எலியா மக்களிடம், “ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நானூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன்.

நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்” என்றார்.

மக்கள் அனைவரும் பதில் மொழியாக, “நீர் சொல்வது சரியே” என்றனர். பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள்” என்றார்.

அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும்” என்று கத்தினர்.

ஆனால் எக்குரலும் கேட்க வில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர்.

நண்பகலாயிற்று, எலியா அவர்களைக் கேலி செய்து, “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!” என்றார்.

எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள்.

பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்க வில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை.

அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர்.

உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். ‘உன் பெயர் இஸ்ரயேல்’ என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலி பீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார்.

அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். “நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின் மேலும் ஊற்றுங்கள்” என்றார். அவர் “இரண்டாம் முறையும் செய்யுங்கள்” என்றார்.

அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். எ

னவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று.

இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, “ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே! எனக்குப் பதில் தாரும்!” என்றார்.

உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும் விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!” என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2ய. 4. 5,8. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2ய நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். பல்லவி

4 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ளேன்; அவற்றின் பெயரைக் கூட நாவினால் உச்சரியேன். பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 25: 4உ,5ய

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இறைவாக்கு, திருச்சட்டம் இரண்டுமே மனித குலத்திற்கு அவசியமானது.

இரண்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்.

இரண்டையும் ஏற்று கடைபிடித்து போதிப்பவர்கள் இன்றைக்கு தேவையானவர்கள்.

மறையுரைச் சிந்தனை (ஜூன் 08)

திருச்சட்டத்தை அழிப்பதற்கு அல்ல, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்.

முன்பெல்லாம் துறவுமடங்களில் புனித வாரத்தின்போது சிறிதளவு ரொட்டியும், தண்ணீரும்தான் தரப்படும். வேறு எந்த உணவும் தரப்படமாட்டாது. துறவிகள் அதை வைத்துக்கொண்டு இயேசுவின் பாடுகளை நல்லமுறையில் தியானிக்கவேண்டும் என்றுதான் இப்படி ஓர் ஏற்பாடு.

புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று ஒருசில பாதசாரிகள் ஒரு துறவுமடத்தில் இருந்த ஆன்மிகக் குருவைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருந்தார்கள். ஆன்மீக குருவும் அவர்களை வரவேற்று, அவர்களோடு சிறுதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மிகவும் களைப்பாக இருப்பதை அறிந்த அவர், வேகமாக சமயலறைக்குச் சென்று, உணவுதயாரித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு உண்ணக்கொடுத்தார்.

சமையல் வாசனை வருவதை அறிந்த சில இளம்துறவிகள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க உணவறைக்கு வந்தார்கள். அங்கே ஆன்மீககுரு ஒருசில மனிதர்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் அவர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. புனிதவாரத்தில் யாருமே உணவு உண்ணக்கூடாது. அப்படியிருக்கும்போது ஆன்மீக குருவே அந்த நெறிமுறையை மீறலாமா? என்று நடந்தவற்றைச் சொல்வதாக துறவுமடத்தின் அதிபரிடத்தில் சென்றார்கள்.

இளந்துறவிகள் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அதிபர் அவர்களிடத்தில், “அவர் (ஆன்மீக குரு) இந்த துறவுமடத்தின் நெறிமுறையை வேண்டுமானால் மீறியிருக்கலாம். ஆனால் அவர் பசியாய் இருப்பவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற கடவுளின் கட்டளையை கடைப்பிடித்திருக்கிறார்” என்றார். அப்போது குருவைப் பற்றி குறைசொல்ல வந்த அந்த இளந்துறவிகள் இப்படிப்பட்ட பதிலை எதிர்பார்த்திராததால் எதுவும் பேசாமல் தங்களுடைய வழியில் போனார்கள்.

மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களைவிடவும், கடவுளின் சட்டம் மேலானது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “சட்டங்களை அழிப்பதற்காக அல்ல, மாறாக அதை நிறைவேற்றவே வந்தேன்” என்கிறார். பொதுவாக இயேசுவின்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று ‘இவன் மூதாதையரின் சட்டங்களையும், ஓய்வுநாள் சட்டங்களையும் மீறுகிறான்’ என்பதுதான். ஏனென்றால் இயேசுவின் பெரும்பாலான புதுமைகள்/அருமடையாளங்கள் ஓய்வுநாளின்போதுதான் நடக்கின்றன. இதை அறிந்துதான் இயேசு இப்படி சொல்கிறார்.

யூதர்கள் சட்டங்களையும், மூதாதையரின் மரபுகளையும் மிக நுணுக்கமாகக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் ஒருபக்கம் ஆதாயமடைந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ சாதாராண ஏழை எளிய மக்கள்தான். அதனால்தான் ஆண்டவர் இயேசு, “சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்” என்கிறார் (மத் 23:4).

இயேசுவின் நோக்கம் சட்டங்களை அழிப்பது அல்ல, மாறாக அதற்கு புதிய அர்த்தம் தருவதுதான். ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற நினைத்த யூதர்களுக்கு, அந்தநாளில் ஒரு நோயாளியை குணப்படுத்துவது நல்லதுதானே என்ற ரீதியில் இயேசு செயல்படுகின்றார். இவ்வாறு அவர் திருச்சட்டத்தின் நிறைவாக இருக்கக்கூடிய அன்பை எல்லா மக்களுக்கும் வழங்குகின்றார்.

நமது வாழ்வில் நாம் சட்டங்களைப் பொறுத்தமட்டில் எவ்வாறு செயல்படுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். சட்டத்தை/ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் செயல்படுகின்றோமா அல்லது அந்த சட்டம் உணர்த்தும் அன்பை இந்த மானிட சமுதாயத்திற்கு வெளிப்படுத்துகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசு சட்டங்கள் மனிதருக்காகவே ஒழிய மனிதர்கள் சட்டத்திற்காக அல்ல (மாற் 2:28) என்ற விதத்தில் செயல்பட்டார். அவர் வழியில் நடக்கும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்று சிந்தித்துப் பார்த்து, திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பை (உரோ 13:10) இந்த உலகிற்கு வாரி வழங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.