10ஆம் வாரம் – வியாழன் இரண்டாம் ஆண்டு 09-06-2016

முதல் வாசகம்

எலியா செபித்தார். வானம் பொழிந்தது.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46

அந்நாள்களில் எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார்.

ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார்.

இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 65: 9ய-உ. 9ன-10. 11-12 (பல்லவி: 1ய)

பல்லவி: உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!

9ய-உ மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி

9ன நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். 10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. 12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

`கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

சினம் கொள்ளுதல் கடவுளின் அன்பை அறிக்கையிட தடையாகும்.

சினம் அடையாது இருந்திடல் இயலாது. மனிதர்கள் என்றால் சினம் ஏற்பட வேண்டும். சினம் ஒரு உணர்வே. இந்த உணர்வு யதார்த்தமாக ஏற்படுகின்றது. இது எனக்கு ஏற்படவே ஏற்படாது என்றால் நாம் மனிதர்களாகவே இருந்திடல் இயலாது.

நல்லது தீயது எல்லாவற்றிலும் இருப்பது போல, சினத்திலும் நல்ல சினம், நாட்டை வளமையாக்கும் சினம் உண்டு. அதற்கு பெயர் அறச்சினம். தீமை, அக்கிரமம் நடைபெறும் போது யாருக்கென்ன என்று இல்லாது, அறச்சினத்தோடு நீதியை நிலைநாட்டும் வேட்கையோடு சினம் கொள்வது சமூகத்தை சீர் செய்திட உதவும்.

சினமுற்றாலும் பாவம் செய்யாதிருப்பதுவே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

மறையுரைச் சிந்தனை ( ஜூன் 09)

ஒப்புறவு செய்துகொள்வோம்

நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த கணவனும், மனைவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்றார்கள்.

கணவன் அந்நாடு முழுவதும் சுற்றி அலைந்து இறுதியாக புதிதாக ஒரு தொழில் தொடங்கினான். அவனது தொழில் அமோகமாக வளர்ச்சியடைந்ததால் பழசை எல்லாம் மறந்து, சந்தோசமாக இருந்தான். மனைவியோ பாவம், அந்நகரிலே தங்கிவிட்டாள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்தக் கணவன், சில ஆண்டுகளுக்கு முன்பாக தீராத நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துபோன தன்னுடைய மகனுடைய கல்லறைக்கு வணக்கம்செலுத்த வந்தான். அவன் கல்லறைக்கு முன்பாக பூச்செண்டுகள் வைத்து வேண்டிக்கொண்டிருக்கும்போது அவனுக்குப் பின்னால், யாரோ ஒருவர் இருப்பதுபோன்று தோன்ற, அவன் திரும்பிப் பார்த்தான். திரும்பிப் பார்த்த அடுத்த நிமிடம், சட்டென அவன் தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஏனென்றால், அவனுக்குப் பின்னால் அவனுடைய மனைவி அஞ்சலி செலுத்துவதற்காக நின்றுகொண்டிருந்தாள். சில நிமிடங்கள் எதுவும் பேசாது அமைதியாக நின்றான்.

அப்போது அவனுக்குப் பின்னால் நின்ற அவனுடைய மனைவி (?)), முன்னால் வந்து மகனது கல்லறையில் மலர்ச்செண்டு வைத்து, அஞ்சலி செலுத்தினாள்.  இருவரும் சில மணித்துளிகள் எதுவும் பேசாதிருந்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ தங்களுடைய தவறை உணர்ந்தவர்களாய் ஒருவர் ஒருவரை அன்போடு அணைத்துக் கொண்டார்கள்.

மகனது கல்லறை பிரிந்துகிடந்த கணவன், மனைவி ஆகிய இருவரையும் சேர்த்து வைத்தது.

பிரிந்து வாழும் ஒவ்வொருவரும் நல்லுறவோடு வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து, “ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்போது உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள்மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நல்லுறவோடு வாழவேண்டும்  என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது.

இன்றைக்கு சகோதர, சகோதரிகளிடத்தில், கணவன் மனைவியிடத்தில். பெற்றோர் பிள்ளைகளிடத்தில் நல்லுறவு இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக பிரிந்துகிடக்கிறார்கள். இதனால் வீடே விடுதி போன்று காட்சியளிக்கிறது. ஆனால் இறைவார்த்தையானது நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்றதொரு அழைப்பினைத் தருகிறது.

திருப்பாடல் 133:1 ல் வாசிக்கின்றோம், “சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துனை நன்று, அது ஆரோனின் தலையிலே ஊற்றப்பெற்ற நறுமணத் தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி, அவர் தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்” என்று. ஆம், நாம் ஒன்றுபட்டு வாழும்போது அதுதரும் மகிழ்ச்சி அளப்பெரியது.

மத்தேயு நற்செய்தி 18:19 -20 ல் வாசிக்கின்றோம், “உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின்பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருகிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” என்று ஆண்டவர் இயேசு கூறுவார். ஆக, நாம் ஒன்றுபட்டு வாழும்போது நாம் கேட்பது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இறைவன் அங்கே குடிகொள்வார் என்பது உறுதி.

எனவே, நம்மிடம் இருக்கும் பிணக்குகள், சண்டைச் சச்சரவுகளை வேரறுத்து ஒன்றுபட்டு, ஒரே மனத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.