10ஆம் வாரம் – செவ்வாய் இரண்டாம் ஆண்டு 07-06-2016

முதல் வாசகம்

எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16

அந்நாள்களில் நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது.

அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்.”

எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.

அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார்.

அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார்.

அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.

எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார்.

அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 4: 1-2. 3-4. 6உ-7 (பல்லவி: 6உ)

பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.

1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்; 2 மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? பல்லவி

3 ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; – இதை அறிந்துகொள்ளுங்கள். 4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். பல்லவி

6உ ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும். 7 தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நற்செயல்கள் கண்டு தந்தையை போற்றுவார்கள்.

நற்செயல்கள் இன்று நடைபெறுகின்றதா? என்பது கேட்டுப் பார்க்க வேண்டிய ஒன்று. நற்செயல்கள் செய்திட்டவர்கள் இன்று பிழைக்கத் தெரியாதவர்கள், பைத்தியக்காரர்கள் என்பதால் இன்று நற்செயல்கள் செய்யும் அன்பர்கள் அருகிக் கொண்டே போகின்றார்கள். இதனால் தந்தையை போற்றுவோர் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகின்றது என்பதுவே நிதர்சனம்.

யாரையும் பற்றி கவலைப்படாது தன்னுடைய முழு கவனத்தையும் இறைப்பணியிலே கொண்டு நல்லது செய்வோர் உண்டு, மிக குறைந்த எண்ணிக்கையில். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போதே இறையாட்சி மலரும். கவனத்தில் கொள்வோம்.

மறையுரைச் சிந்தனை (ஜூன் 07)

‘நீங்கள் உலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்’

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக வெளிநாட்டிலிருந்து இராணுவப்படை ஒன்று இங்கு வந்து இறங்கியது. இராணுவப் படையிலிருந்த வீரர்கள் வாரம் முழுவதும் எங்கெல்லாமோ சுற்றி அலைந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆனதும் ஆலயத்தில் நடைபெறக்கூடிய வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டார்கள்.

இதைக்கூர்ந்து கவனித்து வந்த ஒரு இந்துமத சகோதரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாமோ ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டுவிட்டு வருகிறோம். ஆனால் இவர்களோ ஞாயிற்றுக்கிழமைதான் ஆலயத்திற்குப் போகிறார்கள், அதுவும் ஒருசில மணிநேரங்களிலே ஆலயத்தைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்களைப் பார்த்தால் உண்மையில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்போல தெரியவில்லையே என்று வியந்துநின்றார்.

ஒரு சமயம் அந்த இந்துமத சகோதர் இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஏராளமான மக்கள் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டு பறிதவித்தார்கள். ஒருசிலர் தங்களுடைய வீடுகளையும், உற்றார் உறவினர்களை இழந்து தவித்தார்கள். அப்போது இந்த இராணுவ வீரர்கள்தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை வெளியே கொண்டுவந்தனர். வீடுகளையும், உற்றார், உறவினர்களையும் இழந்து தவித்தோருக்கு தாங்கள் இருந்த முகாமில் இடமளித்து, அவர்களுக்கு பலநாட்கள் உணவளித்து வந்தார்கள்.

இதைப்பார்த்த அந்த இந்துமத சகோதரர் ‘இவர்கள் அல்லவா உண்மையான கிறிஸ்தவர்கள்/ இறைபக்தர்கள். இவர்களைப் போன்று நானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு கிறிஸ்தவராக வாழவேண்டும்’ என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வு சாரமுள்ள, அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று சுவையூட்டக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே இயேசு  கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

ரோமானியர்கள் தங்களுடைய வாழ்வில் உப்பை மிகவும் இன்றியமையாத ஒரு  பொருளாகக் கருதினார்கள். இன்றியமையாத மனிதர்களை “உப்புக் கல்லைப் போன்றவர்கள்” என்றே அழைத்தார்கள். ரோம் நகரில் இன்றைக்கும் முக்கியமான ஒரு சாலையை “Via Salaria – The Salt Route” என்றே அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று முக்கியமானவர்கள். நமது இருப்பு இந்த உலகிற்கு பயன்தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக உப்பு தூய்மைக்கு அடையாளமாக இருக்கின்றது. நமது வாழ்வும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “நீங்கள் தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராய் இருக்கிறேன்” என்று. ஆகவே, நமது வாழ்வை தூய வாழ்வாக அமைத்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு நாம் கெட்டுச் சீரழிந்து போவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மத்தியில் நாம் தூயவராக வாழ்வதுதான் சவால் நிறைந்த ஒரு காரியமாகும்.

நிறைவாக உப்பு பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுகிறது.  உணவுப் பொருட்களை மட்டுமல்லாது, இறந்த மனிதர்களுடைய உடலையும் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்கும் உப்பு பயன்படுகின்றது. உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த சமூகத்தை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.

இந்த உலகம் பணத்திற்கும், இன, சாதிவெறிக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இதனை அழிந்துபோகாமல் மீட்டெடுப்பதுதான் நமது கடமையாகும்.

எனவே உலகிற்கு உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த உலகில் நமது இருப்பு மிக முக்கியமானது என்பதை உணர்வோம், உப்பைப்போல தூய்மையான வாழ்வு வாழ்வோம், இந்த உலகை அழிவிலிருந்து மீட்போம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.